வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் சுகாதார கேடு

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வீடுகள் சுற்றி தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Update: 2024-07-24 14:45 GMT

மாட்டுச்சாணத்துடன் தேங்கி நிற்கும் கழிவு நீர்.

திருவள்ளூர் அருகே காக்களூரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையிலும், வீடு சுற்றிலும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பூங்கா தோப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதனையடுத்து இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆனது கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாத காரணத்தினால் தெருக்களில் உள்ள சாலையில் தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது.

மேலும் இப்பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் மாடுகள் சாணத்தை கொண்டு வந்து தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி செல்கின்றனர். இந்த சாணமானது சுமார் ஒரு அடிக்கு மேல் தேங்கி நின்று குப்பைமேடு போல் காட்சியளிக்கிறது. இதன் அருகே சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி அந்த சாணத்தில் விழுந்ததில் புதை குழியில் விழுந்தது போல் ஆகிவிட்டது. இதனை கவனித்த வாலிபர் ஒருவர் அந்த சிறுவனை மேட்டில் இருந்து காப்பாற்றினார். மேலும் மழை காலங்களில் இந்த சாணத்தின் மீது மழை நீர் விழுந்து சாலையில் படிந்து தேங்கி நிற்கின்றது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இதில் சேர்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.


மேலும் இதில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் பல்வேறு தொற்று நோய்களும் காய்ச்சலும் ஏற்படுகின்றது. இது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் இந்த சாலையை சாணக்குப்பை மேட்டை கடந்துதான் திருவள்ளூருக்கு செல்ல வேண்டும்.அதிலிருந்து துன்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து அப் பகுதி மக்கள் தெரிவிக்கையில் மேற்கொண்ட பிரச்சனையை குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட துறையிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் பல்வேறு தொற்று நோய்களும் வருவதாகவும் அடிக்கடி இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெரும் அவல நிலை உருவாகியுள்ளதாகவும், இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கா விட்டால் இப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

Tags:    

Similar News