நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி
புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்க துறையினர் கைது செய்ததும் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அமலாக்க துறை அதிகாரிகள் அவரை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து குணமடடைந்த பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு பொறுப்பு இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில்பாலாஜி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 33-வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை தமக்கு வழங்கிட கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்.