திருவள்ளூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களின் வீடுகளுக்கு சீல் வைப்பு

திருவள்ளூரில் கோவில் நிலத்தில் குடியிருந்தவர்களின் வீடுகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் அவர்களை வீட்டில் இருந்து வெளியேற்றினர்.;

Update: 2023-06-29 03:45 GMT
ஒரு வீட்டை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பெரியபாளையம் அருகே மதுரவாசல் கிராமத்தில் பல வருடங்களாக இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுரவாசல் கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான சர்வே எண் 181, என்ற இடத்தில் 20 சென்ட் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 40 வருடத்திற்கு மேலாக 9 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5.ஆண்டுகளுக்கு  மேலாகியும் குடியிருப்பு வாசிகள் இதுவரை வீடுகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணை பெற்று இந்து அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 9 வீடுகளுக்கு சீல் வைத்தனர். அப்போது அப்பகுதி மக்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில்  15 க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் தாங்கள் 40 வருடத்திற்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் அரசுக்கு வீட்டு வரி மின் கட்டணம், உள்ளிட்டவை முறையாக செலுத்தி வருவதாகவும் திடீரென்று வந்த அதிகாரிகள் நீதிமன்ற ஆணையை காண்பித்து அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றி சீல் வைத்ததாகவும் வீட்டினுள் இருக்கும் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் கூட எடுக்கவிடாமல் கடுமையாக நடந்து கொண்டது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

சின்ன குழந்தைகளுக்கு பால் பாட்டில் எடுக்கும் அளவில் கூட நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் உடுத்த மாற்று துணி கூட எடுக்க நேரம் தரவில்லை என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து பெரிய முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூலி வேலைக்கு செல்லும் தாங்கள் போன்றவர்கள் மட்டும்தான் இந்த அரசாங்க அதிகாரிகள் மிரட்டி இதுபோன்ற செயல்கள் ஈடுபடுவதாகவும் பெண் குழந்தைகளை வைத்துகக்கொண்டு  எங்கே செல்வது என்று தெரியாமல் வீட்டில் வாசலிலே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News