கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல்
செங்குன்றத்தில் கனரக வாகனங்களை சோதனை செய்து அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை, முகப்பு விளக்குகளை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.;
செங்குன்றத்தில் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள், முகப்பு விளக்குகள் பறிமுதல். 1.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் ஏர் ஹாரன்கள் பொருத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நல்லூர் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கனரக வாகனங்களான தனியார் பேருந்துகள், லாரிகள், ஆம்னி பேருந்துகள், வேன்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஹாரன்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.
தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இருந்து ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த ஆய்வில் 15 வாகனங்களில் விதிகளை மீறி பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் விதிகளுக்கு புறம்பாக கண்களை கூசும் வகையில் பொருத்தப்பட்ட அதிக ஒளி வீசும் 7 முகப்பு விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு 1.6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மீண்டும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது எனவும், அதிகாரிகளின் தணிக்கையில் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தியது கண்டறியப்பட்டால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் எச்சரித்தார்.