திருவள்ளூரில் அமைதியாக நடந்த ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு பேரணி.
தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்தவெளியில் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறையினர்அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் திறந்த வெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல் துறை அனுமதி வழங்கியது.
இந்நிலையில் 12 நிபந்தனைகளுடன் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, பேரணியின்போது தனி நபர்கள், சாதி, மதம் பற்றி தவறாக பேசக்கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது. நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும்ஈடுபடக் கூடாது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்ததாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும். கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேரணி செல்ல வேண்டும். பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதை பேரணி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிபந்தனைகள், உறுதி மொழிகள் மீறப்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கண்ணீர் புகை, வாகனம் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் அதிரடிப்படை வீரர்கள் மற்றும் காவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதற்காக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பேரணி தொடங்கி திருவள்ளூர் பஜார் வீதி வடக்கு ராஜ வீதி மோதிலால் தெரு தேரடி வழியாக திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளம் அருகே உள்ள தனியார் வெங்கடேஸ்வரா தனியார் பள்ளியில் முடிவு பெற்றது.
சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் வஜ்ரா மற்றும் தண்ணீரை பீச்சி அடிக்கும் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.