நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம் புகார்
ஊத்துக்கோட்டை அருகே நிலத்தை தருவதாக கூறி 25 லட்சம் வரை ஏமாற்றி பணம் மோசடி தனது பணத்தை திருப்பி வாங்கி தருமாறு பாதிக்கப்பட்டவர் மனைவியுடன் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.;
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா மேலகொண்டையார் கிராமம் கொமக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்.(வயது 60) இவருக்கு ஊத்துக்கோட்டை தாலுகா காவனூர் கிராமத்தில் டீ கடை நடத்தி வந்த ராகவன், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சொல்வதை கேட்ட கோபிநாதன் என்பவர், எனக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் வீட்டை காட்டுகிறேன் என்று சொல்லி அழைத்துச் சென்று வீட்டை காண்பித்த கோபிநாதனிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி பார்த்த போது பத்திரத்தில் உரிமையாளர் பெயர் வெங்கடேசன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அது குறித்து கேட்டபோது அவர் தன்னுடைய பினாமி என்றும் நீங்கள் எப்போது கிரையம் செய்கிறீர்களோ. அப்போது வந்து கையெழுத்து போடுவார் என கூறியுள்ளார். மேலும் பாரத் பில்டர்ஸ் என்ற நிறுவனம் வைத்திருப்பதாகவும், அதன் மூலம் தான் வீடு கட்டித் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 2018 மே மாதத்தில் ரொக்கமாகவும் காசோலையாகவும் 23 லட்சத்து 87 ஆயிரத்து 400 ரூபாய் பெற்றுக் கொண்டதோடு தன்னிடமிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 5 கறவை மாடுகளை பெற்றுக்கொண்டு கிரையம் செய்து கொடுக்கிறேன் என்று சொன்னவர் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் ராகவனின் மனைவி ஏன் தாமதம் செய்கிறீர்கள் என கோபிநாத்திடம் கேட்டுள்ளார். அதற்கு நான் உங்களிடத்தில் பணத்தை வாங்கவில்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கோபிநாதனை கடினமாக பேசி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கோபிநாதன். ராகவனின் மனைவியை அடித்து கீழே தள்ளி உள்ளார். பின்னர் அங்கிருந்து வந்த எனது மனைவிக்கு ஒரு கை கால் செயல் இழந்து பக்கவாதம் வந்துவிட்டது.
இது குறித்து கோபிநாதனிடம் கூறியதை அடுத்து கடந்த 19.4. 2018 அன்று ஒரு விற்பனை ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்து கொண்டு வந்தபோது அதில் வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் என்பவர் கையெழுத்து போடப்பட்டிருந்தது. அது குறித்து கேட்டதற்கு அவர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் நானே அவரிடம் கையெழுத்து வாங்கி வந்து விட்டேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து 2018 ஜூலை மாதம் 15-ஆம் தேதி அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து குடியேறியுள்ளார் ராகவன். இந்நிலையில் கடந்த மாதம் வெங்கடேசன் என்பவர் போலீசாருடன் வீட்டிற்கு வந்து வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் எனக்கு இன்னும் பணம் பைசல் ஆகவில்லை என்றும் கூறினார். அதற்கு கோபிநாதனிடம் மொத்த பணத்தையும் கொடுத்து விட்டதாக ராகவன் கூறியுள்ளார். அதற்கு எனக்கு பணம் வந்து சேரவில்லை பணத்தை கொடுத்துவிட்டு பிறகு நீங்கள் இருந்து கொள்ளுங்கள் என கூறியதால் அவரிடம் இரண்டு மாதம் தவணை கொடுங்கள், கோபிநாதனிடம் பேசி பணத்தை கொடுக்க சொல்கிறேன் என்று கூறியுள்ளார் ராகவன்.
அதன் பின் கோபிநாதனை ராகவன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி உன் பணத்தை திருப்பி தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் பணம் கேட்டு வந்தால் உன்னை குடும்பத்தோடு காலி செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.இது குறித்து கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் அதன் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் நேற்று மாலை புகார் அளித்துள்ளார். எனவே தன்னிடம் வாங்கிய ரு. 25 லட்சத்து 7,400 பணத்தை மோசடி செய்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் கோபிநாதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என ராகவன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.