செங்குன்றம் அருகே இ சேவை மையத்தில் ரூ.15 லட்சம் பணம் கொள்ளை

செங்குன்றம் அருகே இ சேவை மையத்தில் ரூ.15 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-12-13 07:44 GMT

செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து ரூ. 15லட்சம் மதிப்புள்ள  கொள்ளை போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை  போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகரில் அரசு அங்கீகாரத்துடன்  தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபவர் செந்தில்குமார். இங்கு தமிழக அரசின் வருவாய்த்துறையால் வழங்கப்படும் வருவாய், சாதி மற்றும் முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேற சான்றிதழ்கள், மத்திய அரசின் ஆதார் அட்டை , பான் கார்டு உள்ளிட்ட  சேவைகள் மட்டுமின்றி பணப்பரிமாற்றமும் செய்து வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு தனது கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை மீண்டும் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த ரூ. 15 லட்சம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதனையடுத்து செந்தில்குமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற செங்குன்றம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த  சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த  காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் இருவர் அதிகாலை நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு செங்குன்றம் போலீசார் இது தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்து  குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News