திருவள்ளூர்; ரயில்வே ஊழியரை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்
திருவள்ளூர் அருகே முன் விரோதம் காரணமாக ரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் முன் விரோதம் காரணமாக ரயில்வே ஊழியரை அறிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்துர் வெண்மனம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். தினேஷை முன் விரோதம் காரணமாக தலை,மற்றும் வலது காலில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட காமேஷ் என்பவரை கடம்பத்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தினேஷ் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனையடுத்து குற்றவாளியை கைது செய்யக்கோரி தினேஷின் உறவினர்கள் திடீரென கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் தினேஷின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் நிலவியது.