வீட்டுமனை பட்டா கேட்டு நரிக்குறவர் இன பெண்கள் சாலை மறியல் போராட்டம்
நரிக்குறவர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு சாலை மறியல் பேராட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்திய நரிக்குறவர் இன பெண்கள்.
நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உருண்டும், புரண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக வசித்து வந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 64 குடும்பங்களின் வீடுகளை காலி செய்து கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் பகுதியில் இடம் ஒதுக்கி 64 நரிக்குறவர் குடும்பங்களுக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் அங்கு குடிசை வீடுகளும், காங்ரீட் வீடுகளும் கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்கள் கடன் வாங்கி ஊசி மணி, பாசி மணி, உள்ளிட்டவைகளை குடிசை தொழிலாக செய்து விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வருவதாகவும், தற்போது வசிக்கும் இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க்கோரி பல முறை வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து தரப்பு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்சிடம் மனு அளித்தனர்.
மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அந்த நிலம் மேய்ச்சல் நிலம் என்பதால் அந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாது என்றும் அதற்கு பதிலாக மாற்று இடம் தருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர் இன மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒதிக்கி வழங்கியபோது அந்த நிலம் மேய்ச்சல் நிலம் என்று அப்போதைய ஆட்சியருக்கு தெரியாதா? பட்டா வழங்க முடியாத நிலத்தை ஏன் எங்களுக்கு வழங்க வேண்டும்.
தற்போது வசித்து வரும் இடத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் நிலையில் பட்டா வழங்க முடியாது என தெரிவித்துள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தற்போது வசிக்கும் இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலக்தை முற்றுகையிட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உருண்டும், புரண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.