திருவள்ளூரில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல்

தொடர் மின்வெட்டு காரணமாக திருவள்ளூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-06-23 06:15 GMT

திருவள்ளுர் அருகே மூன்று நாட்களாக தொடர் மின்வெட்டு காரணத்தால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளுர் மாவட்டம் மணவாள நகர் அடுத்த அதிகத்தூர் பகுதியில் சுமார் 1200 குடியிருப்புகளில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக அப்பகுதியில் சீரான மின்சாரம் விநியோகிக்கபடாததால் இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் வைத்துக் கொண்டும், பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் வெளிச்சம் இன்றி படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லையால் தூக்கம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மின்சாரத்தால் இயங்கும் சிறு தொழில்களும் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.


ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவள்ளூர்- மணவாள நகர் சாலையில் 100க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மணவாள நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த பொதுமக்கள் கூறுகையில், நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும் அதற்குண்டான பணிகளை ஏதும் நடப்பதில்லை.

கடந்த ஆட்சியில் மின்சார பற்றாக்குறை ஓரளவுக்கு தான் இருந்தது, தற்போது இந்த மின்வெட்டு அதிகரித்து உள்ளது.  இதனால் அரசுக்கு அவ்வப் பெயர் ஏற்படும் எனவும் அதிகாரிகள் வந்து பதிலளிக்க வேண்டும் என பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்துபேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News