கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
கூவம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கூடுதல் வகுப்பறைகளை கட்டித் தர சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூவம் கிராமத்தில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கூவம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவி,மாணவர்கள் 6. முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் போதுமான கட்டிடம் வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளியின் வெளிப்புறத்தில் அமர்ந்து படிக்கும் அவளை நிலை உருவாகியுள்ளது. இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர பலமுறை மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் திடீரென மப்பேடு-தண்டலம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடையே பேச்சுவார்த்தையில் மேற்கொண்டனர்.
அப்போது மாணவர்கள் தெரிவிக்கையில் தாங்கள் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் இல்லாததால் வெயில் காலங்களில் வெளிப்புறத்தில் அமர்ந்து படிக்கின்ற நிலைமை உள்ளதாகவும், மழைக்காலத்தில் கூடுதல் வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்படுவதாகவும் பாடங்களை கவனிக்க முடியாமல் போகிறது என்றும் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் மப்பேடு தண்டலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.