போக்சோவில் கைதான ஆசிரியர்களை விடுவிக்க கோரி பள்ளி மாணவிகள் சாலை மறியல்
பொய் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க கோரி திருவள்ளூரில் பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போக்சோவில் கைதான ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி திருவள்ளூரில் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டம் 4 மணி நேரத்திற்கு பின் விலக்கிக்கொள்ளப்பட்டது. மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதான பொய் புகாரில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்கக்கோரியும் திருவள்ளூர் ஆவடி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 600-க்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு புகார்கள் சென்றது.
இதனைத்தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் செவ்வாப்பேட்டையில் உள்ள பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கிருந்த சில மாணவிகள் கணித ஆசிரியர் ஜெகதீசன், அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் அறிக்கை பெறப்பட்டதை தொடர்ந்து, ஆதிதிராவிடர்நலத்துறை பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து 2 ஆசிரியர்களும் தற்காலிக பணியின் நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
2 ஆசிரியர்களை போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் ஆவடி சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சோவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் போராட்டம் தொடர்ந்தது.
கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வேப்பம்பட்டு பகுதியில் திருவள்ளூருக்கு சென்ற ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட மாணவிகள், போராட்டத்தை தொடர்ந்தனர்.
4 மணி நேரமாக தொடர்ந்த போராட்டத்தால் திருவள்ளூர்-ஆவடி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அப்போது மாணவிகளுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவிகள் மற்றும் பெற்றோர்களை காவல் துறையினர் கைது செய்ய இழுத்து சென்ற நிலையில்.அதற்கும் கண்டனம் தெரிவித்து மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர்,எழுத்துப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் புகார் மனுக்களை எழுதி தரவும், புகா் மனுக்கள் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் மாணவிகளிடம் கூறிய நிலையில், மாணவிகள் அனைவரும் புகார் மனுக்களை எழுதி அளித்ததால், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.