சோழவரம் அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டம்
Road Block Agitation With Dead Body சோழவரம் அருகே இருந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
Road Block Agitation With Dead Body
சோழவரம் அருகே விபத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சடலத்துடன் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது25). நேற்று இவர் தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஜனப்பன்சத்திரம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்றவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது விபத்து நடைபெற்ற ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சோழவரம் காவல்துறையினருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அளித்த உறுதியை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றனர். சடலத்துடன் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.