பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாலை வசதி, மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-29 08:36 GMT

பெரியபாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

இருளில் சூழ்ந்து கிடக்கும் பெரியபாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் பின்புறம் அமைந்துள்ளது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் பெரியபாளையம், தண்டலம், காக்கவாக்கம், குமரப்பேட்டை, 82 பனப்பாக்கம், வடமதுரை, கன்னிகைப்பேர், மதுர வாசல், அத்திவாக்கம், ஆலப்பாக்கம், தண்டு மேடு, அழிஞ்சிவாக்கம், திருக்கண்டலம், சூளை மேனி, கல்பட்டு, மேல் மாளிகை பட்டு, உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் தாங்களுக்கு வரக்கூடிய காய்ச்சல், சளி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பெண்கள் மகப்பேறு, நாய் கடி, உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள்.


இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாகவே இரவு நேரத்தில் நோயாளிகள் வந்து செல்ல மின்விளக்குகள் எரியாத நிலையில் உள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே உட்புற சாலை அமைக்காததால் மழைக்காலங்களில் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி நின்று குளம் போல் காட்சி அளிப்பதோடு சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறி அவ்வழியில் செல்லும் வயதான நோயாளிகள் தடுக்கி விழுந்து காயங்கள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் அதன் கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களிடம் அடிப்படை வசதிகளை செய்து தர மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்லும் நோயாளிகளிடம் கேட்டபோது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெரியபாளையத்தில் அமைந்துள்ளதாகவும் இந்த மருத்துவமனைக்கு செல்லும் வகையில் உட்புற சாலை அமைக்காததால் அதில் மழை நீர் தேங்கி நிற்பதாகவும், இரவு நேரங்களில் மருத்துவரை இல்லாததால் செவிலியர்களே சிகிச்சை அளிப்பதாகவும், மருத்துவர் இல்லையா என்று கேட்டபோது தரக்குறைவாக மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் பதிலளிப்பதாக தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என நோயாளிகளும், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News