திருவள்ளூர் அருகே பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி முதல் வார திருவிழா
திருவள்ளூர் அருகே நல்லூர் ஊராட்சியில் புரட்டாசி முதல் வார திருவிழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி முதல் சனிக்கிழமை வாரத்திருவிழாவை முன்னிட்டு நல்லூரில் திருப்பதி ஏழுமலையானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் குழு சார்பில் இரண்டாம் ஆண்டு புரட்டாசி முதல் வாரத்திருவிழா மற்றும் சிறப்பு தளிகை பூஜை நேற்று சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு பட்டு உடைகளால், துளசி இலை மாலைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தபடி திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பெருமாளுக்கு பிடித்த நைவேத்தியமான புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், கொண்டக்கடலை, வடை உள்ளிட்ட ஒன்பது வகையான பலகாரங்களும் விதவிதமான பழங்களும் படையலிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மதன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருவிழா விழா குழுவின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். மேலும் நரேஷ்குமார், சசிகுமார், கணேஷ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவின் சிறப்பம்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் குழுவின் நிர்வாகி மணிகண்டன் தலைமையில் கார்த்திக்ராஜா, விக்கி, தமிழரசன், ஜீவா, ரூபேஷ் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்து விட்டு சென்றனர்.