பெரியபாளையம் அருகே பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்திற்கு குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-06-20 02:45 GMT

பெரியபாளையம் அருகே குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் கல்வி பயில்வதற்காகவும், அலுவலகம் செல்வோர் என பல்வேறு தேவைகளுக்காகவும் திருவள்ளூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

திருவள்ளூர் முதல் அவாஜிப்பேட்டை வரை இயக்கப்படும் பேருந்து இந்த கிராமத்தின் வழியே செல்லும் நிலையில் குறித்த நேரத்தில் வருவதில்லை என கிராம மக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

இந்நிலையில் அரசுப்பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை எனக்கூறி பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பள்ளி துவங்கும் நேரத்தில் செல்ல முடியாமல் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

மேலும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனை செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரும் பேருந்து சேவை முறையாக இயக்கப்படாததால் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என அடுத்தடுத்து வந்த 3அரசுப்பேருந்துகளையும் சிறை பிடித்தனர்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் பேருந்து பணிமனை நிலைய மேலாளர் புண்ணியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து குறித்த நேரத்தில் பேருந்துகளை இயக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனையடுத்து அரசுப்பேருந்துகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News