பழைய ஊராட்சி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை
ஊராட்சி நிர்வாகம் தற்காலிகமாக ஊராட்சியில் உள்ள இ- சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது;
பூரிவாக்கம் ஊராட்சி மன்ற பழைய கட்டிடம் அகற்றி புதிய ஊராட்சி கட்டிடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே பூரிவாக்கம் ஊராட்சியில் சுமார் 3.000 மக்கள் வசிக்கின்றனர் இங்கு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடம் பழுதடைந்து மூன்று வருட காலமாக இ -சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி நிர்வாகம் இயங்கி வருகிறது. பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் உள்புறம் ஆங்காங்கு பழுதடைந்து சிமெண்ட் பூசுகள் பெயர்ந்து மழை காலங்களில் தண்ணீர் கசிந்து ஊராட்சி முக்கியமான கோப்புகள் பத்திரப்படுத்த சிக்கல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத வகையில் மாரி உள்ளது.
மேலும் கட்டிடத்தை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து அதிலிருந்து விஷப்பூச்சிகள், பாம்புகள் கட்டிடத்திற்குள் வந்து விடுவதாகவும் சில நேரங்களில் இந்த கட்டிடத்தில் சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப் பட்டு வருவது காரணத்தினால் ஊராட்சி நிர்வாகம் தற்காலிகமாக ஊராட்சியில் உள்ள இ- சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித் தர பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டித் தர வேண்டும் என பூரிவாக்கம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.