கொசஸ்தலை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார்
கொசஸ்தலை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.;
பெரியபாளையம் அருகே கொசஸ் தலை ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை நடப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சி அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. கொசஸ்தலை ஆற்றினால் மழைக்காலங்களில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை புறநகர்ப்பகுதிகளில் கடந்த காலங்களில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அழிஞ்சிவாக்கம் -பாஷிகாபுரம் இடையே ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் அருகிலேயே இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிக அளவில் நடக்கிறது. மணல் கொள்ளையர்கள் எந்தவித அனுமதியும் இன்றி மணல் கொள்ளையர்கள் மணல் மூட்டைகள் கட்டி இரு சக்கர வாகனம் மற்றும் மினி வேன்களில் இரவு நேரங்களில் கடத்தி செல்கிறார்கள்.
இப்படி இந்த பகுதியில் தொடர் மணல் கொள்ளை நடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சில நேரங்களில் ஆற்றின் கரைகளை உடைத்து அதிலிருந்து மணல் மற்றும் சவுடு மணல் கொள்ளை அடிப்பதால் கரை மிகவும் பலவீனமடைந்து மழை காலங்களில் ஆற்றில் செல்லும் தண்ணீரானது ஊருக்குள் புகுந்து விடும் என்ன அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மேம்பாலம் அருகே மணல் கொள்ளையடிப்பதால் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலமும் பலவீனம் அடையும் அபாயம் உருவாகும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் திருக்கண்டலம், தடுப்பணை அருகே கல்மேடு பகுதியில் தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்று மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.