தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
எல்லாபுரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியபாளையத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு "டிட்டோ-ஜாக்" சார்பில் மாநிலம் தழுவிய வட்டார தலைநகரங்களில் வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது சி.பி.எஸ் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டமான ஜி.பி.எஃப் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை நீக்கிடவேண்டும், பறிக்கப்பட்ட சரண்விடுப்பை மீட்டுத்தரவேண்டும், ஊக்கஊதியம் மீண்டும் வழங்கிட வேண்டும்இ தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்,கொத்தடிமைகளாக பணியாற்றிடும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும், இ.எம்.ஐ.எஸ் பணியில் இருந்து விடுவித்து ஆசிரியர் பணி செய்திட வேண்டும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும்,தமிழக முதல்வர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிடவேண்டும், புதிதாக கொண்டு வந்துள்ள அரசாணை 243-ஐ உடனே நீக்கி விட்டு பழைய நடைமுறையான வட்டார அளவில் முன்பு இருந்ததை போல் முன்னுரிமை அடிப்படையில் மீண்டும் தொடர்ந்திடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எல்லாபுரம் வட்டார தலைவர் செல்வம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க எல்லாபுரம் வட்டார தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ராஜாஜி, எல்லாபுரம் வட்டார பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றி பேசினர்.
கோரிக்கைகளை நிறைவேற வலியுறுத்தி அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரமான திருவள்ளூரில் ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினர்.முடிவில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க வட்டார பொருளாளர் இளங்கோ நன்றி கூறினார்.