வீடுகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பூந்தமல்லி கோலடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

Update: 2024-10-22 09:45 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையி்ட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்.

திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் மற்றும் பள்ளி மாணவர்களுடன் சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைகளை கூப்பி வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் உள்ள பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதாக பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டு இருப்பதை உறுதி செய்த வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதனையடுத்து திருவேற்காடு கோலடி பகுதியைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் சீருடை அணிந்தும் பெண்கள் ,ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.500க்கும் மேற்பட்டோர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதனையடுத்து அங்கிருந்த பெண்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்திய நிலையில் தற்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த40 ஆண்டுகளுக்கு மேலாகவே வீடுகளை கட்டி வசித்து வருவதாகவும், அதிகாரிகள் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றி வருவதாகவும்,40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் அப்பகுதி மக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, மின்சாரம் கட்டணம் உள்ளிட்டவற்றை முறையாக கட்டி வருவதாகவும் அங்குள்ள கோலடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கள் மாணவர்கள் பயின்று வரும் நிலையில் திடீரென வீடுகளை இடித்து விட்டால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதுடன் ஏழைகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் போலீஸ் பாதுகாப்பினையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கு ம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

Tags:    

Similar News