பூண்டி அருகே 2 ஏரிகள் உருவாக்க திட்டம்: அமைச்சர் துரை முருகன் தகவல்

பூண்டி ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் துரை முருகன் அதன் அருகே இரண்டு புதிய ஏரிகள் உருவாக்கப்படும் என கூறினார்.

Update: 2023-12-08 09:40 GMT

பூண்டி ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, மூர்த்தி ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரால் பாதிப்பை தடுக்க கொசஸ்தலை ஆரணி ஆற்றின் உபரி நீரை ராமஞ்சேரி,  திருக்கண்டலம் பகுதியில் இரண்டு பெரிய ஏரிகளை உருவாக்கி தேக்கி வைக்க திட்டமிட்டு இருப்பதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்த் தேக்கமாக உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் அணை பாதுகாப்பு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

சென்னை மாநகரத்தில் எவ்வளவுதான் முன்னேற்பாடுகள் செய்தாலும் எதிர்பார்க்காத வகையில் பெருமழை பெய்ததால் அவைகளை கட்டுப்படுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு விடுகிறது.

மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை  மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான உணவு உடைகள் நிவாரண பொருட்களை அமைச்சர்கள் மூர்த்தி, காந்தி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

பூண்டி, புழல் ஏரிகளை பாதுகாக்க நீர்வளத்துறை அதிகாரிகள் அல்லும் பகலும் பாராமல் 24 மணி நேரமாக பணியாற்றி வருகிறார்கள்.

புழல் ஏரியின் நடைபாதையில் சிறிய சரிவு ஏற்பட்டது பற்றி ஒரு செய்தி நிறுவனம் பெரிய பீதியை ஏற்படுத்தியதால் அப்பகுதியில் முதல்வர் ஆணைக்கிணங்க நான் சென்று ஆய்வு செய்தேன். அப்போது அந்த ஆய்வில் எந்தவித பாதிப்பும் மக்களுக்கு ஏற்படாது என்பதை நேரடியாக சென்று பார்த்தேன். 

பூண்டி ஏரிக்கு வரக்கூடிய நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டு விடுவதால் ஏரிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. பருவமழை காலங்களில் உபரி நீரை வீணாக கடலில் திறந்து விடுவதை தடுப்பதற்கும் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்றிற்கு வரும் உபரி நீரை அதிக அளவில் ஆற்றில் விடுவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பூண்டி அருகே ராமஞ்சேரி, திருக்கண்டலம் பகுதிகளில் மிகப்பெரிய இரு ஏரிகள் உருவாக்கி தண்ணீரை தேக்கி வைக்க ஆய்வு செய்திருக்கிறோம். இதற்கு அந்த  இடங்களில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நிலங்களுக்கு ஏற்ற வகையில் இழப்பீடு அளித்து அவற்றை நிறைவேற்ற முதல்வரிடம் கூறி உள்ளோம்.

பருவ காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்தாகவேண்டுமென்றால் ராமஞ்சேரி, திருக்கண்டலத்தில் உபரி நீரை தேக்கி வைக்க மிகப்பெரிய இரண்டு ஏரிகள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் காந்தி ,மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ. கிருஷ்ணசாமி, டி.ஜெ. கோவிந்தராஜன், நீர்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

Tags:    

Similar News