திருவள்ளூர் அருகே பணமோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் கைது
Private Bank Manager Arrested ஐ.டி.ஊழியரிடம் 1.13 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
தனியார் வங்கி மேலாளர் ராஜ்குமார்.
Private Bank Manager Arrested
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரைச் சேர்ந்தவர் கிரிபிரசாத்ராவ்,( வயது 44).பெங்களூரில் உள்ள ஐ.டி.சி., இன்போடெக் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி ( வயது 40). என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது பள்ளி பருவ பெண் நண்பரான காயத்ரி என்பவர் மூலம் மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவரும் சென்னை தி.நகர் ஆக்ஸிஸ் வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் (38) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் ஆக்ஸிஸ் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்து வந்துள்ளார். பி.எம்.எஸ். என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தினால் மாதா மாதம் பங்குத்தொகை அதிகம் கிடைக்கும் என்றும் எப்போது கேட்டாலும் முழுத்தொகையையும் திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய கிரிபிரசாத்ராவ் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.3 லட்சம், வங்கி மூலம் அனுப்பி உள்ளார். பின் அதே மாதம் 5-ஆம் தேதி 10 லட்சமும், தொடர்ந்து 8-ஆம் தேதி ரூ.5 லட்சமும், செப்டம்பர் 13-ஆம் தேதி ரூ.30 லட்சமும், 2022-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.5 லட்சம், 2023-ஆம் ஆண்டு ரூ. 60.30 லட்சம் என மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறையாக பங்குத்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு திருவள்ளூர் காக்களூர் பகுதியில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த போது கிரிபிரசாத் கொடுத்த 1.13 கோடி ரூபாய் பணத்தை கேட்டுள்ளார்.அப்போது, கேட்ட பணத்தை உடனடியாக தருவதாக கூறி வந்த ராஜ்குமார் திடீரென தலைமறைவானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிரிபிரசாத்ராவ் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பவானி மீது நம்பிக்கை பண மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இதில் கடந்த ஓராண்டாக திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு ராஜ்குமார் வந்ததாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று ராஜ்குமாரை கைது செய்தனர். பின் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் வங்கி மேலாளர் ராஜ்குமார் இதே போல் அதிக பங்குத்தொகை தருவதாக பலரிடம் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.