திருவள்ளூர் மாவட்டத்தில் 10 போலி டாக்டர்கள் கைது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையினரும் , சுகாதார துறையினரும் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாணுக்கு வந்த தகவலையடுத்து காவல்துறையினர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் சேகர் தலைமையிலான சுகாதாரத்துறையினர் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்த சோதனையில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூரில் டிஎன்எம்எஸ், எம்ஏ படித்து முத்துசாமி, பேரம்பாக்கத்தில் டிப்ளமோ இன் ஹோமியோபதி படித்த தேவராஜ்,கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் செல் தெரபி படித்த மகேஷ், கவரைப்பேட்டையில் சித்தா படித்த ஞானசுந்தரி,
ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் பிஏ படித்து விட்டு எம்பிபிஎஸ் மருத்துவரிடம் கம்பவுன்டராக பணி புரிந்து செல்போனில் அழைத்தால் இரு சக்கர வாகனத்தில் சென்று சிகிச்சை அளிப்பவர். இவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கைது செய்யபட்டார்.
திருத்தணியை அடுத்த கேஜி கண்டிகை பகுதியில் லேப் டெக்னீஷியன் படித்த ராபர்ட், திருவாலங்காடு பகுதியில் படிக்காமலே மருத்துவம் பார்த்த ரெஜினா (74), ஆர்.கே.பேட்டை அடுத்த செங்கட்டானூர் கிராமத்தில் எலக்டரோபதி படித்த ஞானபிரகாஷ்(35), பள்ளிப்பட்டு பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்த மோகன் குமார், பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் 10-ஆம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் வைத்து பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த வடிவேல் (53) என்பவர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஆங்கில மருந்துகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.