பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ளது சுயம்புவாக எழுந்தருளி புகழ் பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் வருகின்ற 17-ஆம் தேதி அன்று ஆடி மாதம் ஆடித் திருவிழா 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
சனிக்கிழமை பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுவர்கள் பெரியவர்கள் வரை மொட்டை அடித்து பொங்கல் மண்டபத்தில் பொங்கல் வைத்து ஆடு, கோழி என பலியிட்டு வளாகத்தில் உள்ள வேப்பமர அடியில் படையல் இட்டு உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை கையில் தேங்காய் ஏந்தி கோவில் சுற்றி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடனை செலுத்தி செல்வார்கள்.
இன்று இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த10-ஆம் தேதி அன்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, தொடர்ந்து இன்று காலை அவபிரத யாகம், யாக பூஜை, மகாபூர்ணாஹூதி, யாத்ராதானம், உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் முடிக்கப்பட்டு கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் யாகசாலையில் இருந்து கொண்டு வழங்கப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்தனர். அதிகாலை 6.30 மணி அளவில் யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை கொண்டு ராஜகோபுரம், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை காண திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம்,பொன்னேரி, ஆரணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் ஆலயத்தில் உள்ள மூலவர் பவானி அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் ஜவ்வாது தேன் பன்னீர் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டுஉடைகளாலும், திரு ஆபரணங்களால், வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.