ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைத்துத்தர மக்கள் கோரிக்கை
ஆரணி பேரூராட்சி 127 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பேருந்து நிலையம் இல்லை. பேருந்து நிலையம் அமைத்து தர விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் சுமார் 15 வார்டுகளில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பேரூராட்சியில் பெரும்பாலும் மக்கள் நெசவுத் தொழிலை நம்பி பிழப்பு நடத்தி வருகின்றனர். மேலும் இங்கு தனியார் வங்கிகள், சார் பதிவாளர் அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலை என இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் ஆரணி பேரூராட்சி சுற்றியுள்ள மங்களம், பெரியபாளையம், காரணி, புதுப்பாளையம், குமரப்பேட்டை, திருநிலை, அமிதா நல்லூர், அக்கரபாக்கம், உள்ளிட்ட பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பகுதிகளில் பெரும்பாலான மக்கள் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கத்தரி, வெண்டை, கீரை வகைகள், வாழை, முள்ளங்கி, மல்லி, சாமந்தி, கனகாம்பரம் போன்ற பருவத்திற்கு ஏற்ப பயிர்களை நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் விளைவிக்கும் காய்கனிகளை கிராமங்களில் இருந்து கொண்டு வந்து ஆரணியிலிருந்து பேருந்துகளில் மூலம் சென்னை கோயம்பேடு, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,செங்குன்றம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்.
இந்த கிராமங்களுக்கு மையமாக உள்ள இந்த ஆரணி பேரூராட்சி உருவாகி 127 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பேருந்து நிலையம் இல்லை என்றும், பலமுறை சட்டமன்ற உறுப்பினர்களிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பணிகளுக்கு வந்து செல்லும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சாலை ஓரங்களில் நின்று வந்து செல்லும் பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஆரணி பேரூராட்சியில் நெசவுத்தொழில் செய்யும் தொழிலாளர்கள் அவர்கள் தயார் செய்யும் சேலைகள், ஆடைகள் உள்ளிட்டவை இங்கிருந்து சென்னை டி.நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
மழை காலம் வந்துவிட்டால் நிற்பதற்கு இடம் இல்லாமல் சாலை ஓரங்களில் உள்ள கடை கூரைகள் கீழ் நின்று செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர் தெரிவிக்கையில், இந்தத் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பொதட்டூர்பேட்டை, நாரவாரி குப்பம், உள்ளிட்ட 8 பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆரணி பேரூராட்சியில் தற்போது வரை பேருந்து நிலையம் இல்லை.
தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு வெயிலில், மழையில் நனைந்து பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற, அமைச்சர் பெருமக்களிடம் மனுக்களை அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் பேருந்து நிலையம் அமைக்க ஆரணி சுடுகாடு அருகாமையில் இடம் தேர்வு செய்தும் அது தனியாருக்கு சொந்தமான இடம் என்றும பேருந்து நிலையம் அமைக்க கூடாது என்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்ந்த நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் நலனை கருதி இந்த ஆரணி பேரூராட்சிக்கு பேருந்து நிலையம் கட்டித் தர வேண்டும் என தெரிவித்தனர்.எனவே தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.