திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர் அருகே தொழுவூரில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமாக கல்லறையில் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-05-21 04:45 GMT

கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது சடலங்களை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையில் புதைத்து வந்தனர்.

ஆனால் தற்போது அங்கே இடமில்லாததால் திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி அதனை கடந்த 2020 ஆம் ஆண்டு தொழுவூர் கிராம பஞ்சாயத்தில் இந்த இடம் கல்லறைக்காக என தீர்மானம் நிறைவேற்றி அதனை முறைப்படி வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் என வருவாய்த்துறையரிடம் சமர்ப்பித்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் இன்று உயிரிழந்ததால் அவரது உடலை முதல் முறையாக இந்த கல்லறையில் இன்று மாலை அடக்கம் செய்துள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அடக்கம் செய்த உடலை தோண்டி எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மேலும் வெளியூர்களில் உயிர் இழப்பவர்களின் சடலங்களை புதைக்க இங்கே நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கிட்டத்தட்ட மாலை 6 மணி முதல் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது கிறிஸ்தவர்கள் சார்பில் கல்லறை அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளது. அதனால் புதைத்த உடலை தோண்டி எடுக்க முடியாது என்றும், இது சம்பந்தமாக முறையாக கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், மேலும் இது சம்பந்தமாக பிரச்சனை செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இ

தனால் தொழுவூர் பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. மேலும் ஊராட்சி தலைவர், மற்றும் வருவாய்த் துறையினர் கையூட்டு வாங்கிக் கொண்டு தடையில்லா சான்றிதழ் வழங்கியதாகவும், இங்கு கல்லறை கட்ட அனுமதிக்க கூடாது என புகார் மனு அளிக்க உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags:    

Similar News