காணும் பொங்கலை முன்னிட்டு பூண்டி நீர்த்தேக்கத்தில் குவிந்த மக்கள்
திருவள்ளூரை அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமானதாகவும், சுற்றுலா தலமாகவும் திகழும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளது. 14ந்தேதி போகி பண்டிகை, 15ம் தேதி பொங்கல் பண்டிகை, மறு நாள் மாட்டுப்பொங்கல் அதற்கு அடுத்த நாளான நேற்று காணும் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர். காணும் பொங்கலன்று கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் சென்று காணும் பொங்கலை கொண்டாடினார்கள்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் காணும் பொங்கலையொட்டி பூண்டி திருவள்ளூர், அரக்கோணம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் நேற்று மற்றும் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரிக்கு வந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.மேலும் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட பூங்காக்களை பழுதடைந்து பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த வரை மக்கள் அதிகம் பார்க்கக்கூடிய முக்கியமான இடங்களில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமும் ஒன்றாக இருந்து வரும் நிலையில் தற்போது பழுதடைந்த பூங்காக்களை தமிழக அரசு சீரமைத்து விரைவில் திறக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர்.