புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக வட்டவழங்கல் அலுவலகத்தல் குவிந்த மக்கள்
திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை கேட்டு கடந்த ஓராண்டாக விண்ணப்பித்தவர்கள் காத்து கிடந்தனர். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையிலும், குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் வட்ட அளவில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அச்சாகி வந்துள்ளதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
தற்போது தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்திருப்பதால், அந்த 2000 ரூபாயை பெறுவதற்காக பொதுமக்கள் காலையிலேயே குடும்ப அட்டை பெறுவதற்கு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் கூட்டத்தை கட்டுப்படுத்தி, வரிசையில் நிற்க வைத்து வாங்கிச் செல்ல அறிவுறுத்தினார்.
மேலும் தங்கள் வசிக்கும் அருகிலேயே இருக்கும் நியாயவிலைக் கடையில் இரண்டொரு நாளில் நாளில் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அங்கேயே வாங்கி கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.