புழல் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

புழல் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2023-07-02 10:19 GMT

சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்.

புழல் அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியல் செய்த பொதுமக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை திருமலை நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். புழல் சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் காவாங்கரை திருமலை நகர் பகுதியில் அமைந்துள்ள 7 தெருக்களில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிலத்தடி நீரும் மாசடைந்து குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றது.


தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதுபோராட்டம் நடத்திய பொதுமக்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தான் இங்கிருந்து செல்வோம் இல்லை என்றால் இரவானாலும் போராட்டம் தொடரும் என உறுதியாக கூறினார்கள். அப்போது போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

அதன் பின்னரே சுமார் ஒரு மணி நேரமாக நிலவிய பரபரப்பு விடைபெற்றது.

Tags:    

Similar News