ஆன்லைன் மூலம் 1.6 லட்சம் பணம் மோசடி
Online Scam Police Enquiry புழலில் ஆன்லைன் மூலம் மூன்று பேரிடம் 1.6 லட்சம் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
Online Scam Police Enquiry
புழலில் வெவ்வேறு வகைகளில் ஆசை வார்த்தை கூறி மூவரிடம் ரூ.1.6லட்சம் நூதன மோசடி. சைபர் மோசடி கும்பல் குறித்து புழல் போலீசார் விசாரணை. மோசடியை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை புழலை சேர்ந்த நுஸ்ராத் பாத்திமா என்பவர் தம்முடைய சோஃபாவை விற்பனை செய்வதற்காக ஆன்லைன் வர்த்தக செயலியை தமது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு குறுஞ்செய்து வந்துள்ளது. சோபாவை பெற்று கொள்வதாகவும், அதற்காக அனுப்பிய QR code ஸ்கேன் செய்யுமாறு கூறியதன் பேரில் ஸ்கேன் செய்ததை தொடர்ந்து முதலில் நுஸ்ராத் பாத்திமா கணக்கிற்கு சோதனை அடிப்படையில் 5ரூபாய் வந்துள்ளது. மீண்டும் அதே முறையில் 12000ரூபாய் அனுப்புவதாக கூறியதன் பேரில் மீண்டும் QR code ஸ்கேன் செய்துள்ளார்.
அப்போது அடுத்தடுத்து 12000, 12000, 24000 நுஸ்ராத் பாத்திமா வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தமது கணக்கில் இருந்து 48000 ரூபாய்மோசடி செய்யப்பட்டது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவ தேவைகளுக்காக தமது வங்கி கணக்கில் வைத்திருந்த பணத்தை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார்.
இதே போல புழலை சேர்ந்த அருள்மொழி என்பவருக்கு டெலிகிராம் செயலில் உள்ள சேனலை பின்தொடருமாறு வந்த குறுஞ்செய்தியின் பேரில் பின் தொடர்ந்துள்ளார். அப்போது கொடுக்கப்படும் டாஸ்குகளை முடிப்பதன் அடிப்படையில் பணம் கிடைக்கும் என கூறி முன் பணம் செலுத்த வேண்டும் என கூறியதன் பேரில் அடுத்தடுத்து பணத்தை செலுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் பணத்தை செலுத்துமாறு கூறியதால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள்மொழி தம்மிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட 62600 ரூபாயை மீட்டு தருமாறு புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
. இதே போல பாஸ்கரன் என்பவர் பகுதிநேர வேலை தேடிய போது வாட்சப்பில் வந்த லிங்கை பின் தொடர்ந்ததில், பல்வேறு டாஸ்குகள் அடிப்படையில் பணம் ஈட்டலாம் என கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முன் பணம் செலுத்தி அடுத்தடுத்த டாஸ்குகளை முடித்த போது பணம் திரும்ப செலுத்தப்படாமல் மீண்டும் முன் பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் ரூ.55815 மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடுத்தடுத்து புழலில் மூவரிடம் நூதன முறையில் 1.6லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரது புகார்களின் மீது புழல் போலீசார் மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் என இரு பிரிவுகளில் தனித்தனியே வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் சுற்றுவட்டார இடங்களில் நடைபெற்று வரும் ஆன்லைன் மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமலும், தொடர் மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளை துப்பறிய முடியாமலும் புழல் போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.