சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவையொடடி நவகலச பூஜை

சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு நவகலச பூஜை நடைபெற்றது.;

Update: 2023-08-21 10:54 GMT

சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் நவகலச பூஜை சிறப்பு வழிபாடு கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம், புதிய வீடு கட்டுதல், ரியல் எஸ்டேட், அரசியல் வளர்ச்சி, உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.


மேலும் பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்டியும் செங்கற்கள் அடுக்கி வைத்தும் வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12.ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது.

மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல்,கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கோபுர கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றி 19ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிவுற்று ஓராண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் நவகலச சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. பின்னர் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களை புரோகிதர்கள் மேள தாளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்து பின்னர் மூலவருக்கு கலசங்களில் இருந்த  புனித நீரை ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பால்,தயிர், சந்தனம்,ஜவ்வாது,தேன், இளநீர்,பன்னீர்,உள்ளிட்ட வாசனை திரவியங்களால் பல்வேறு அபிஷேங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து மூலவர் பாலசுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீப, தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. மஹா கும்பாபிஷேக வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நவகலச பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News