விஷவாயு தாக்கி 2 தொழிலாளர் இறந்த இடத்தில் தேசிய ஆணைய தலைவர் ஆய்வு
விஷவாயு தாக்கி 2 தொழிலாளர் இறந்த இடத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.;
விஷவாயு தாக்க இரண்டு தொழிலாளர்கள் இறந்த இடத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.
விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் இடத்தின் உரிமையாளர்கள் வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் சிறை தண்டனையும் ஓராண்டில் இருந்து 5ஆண்டுகளாக அதிகரித்தால் உயிரிழப்பு சம்பவங்கள் குறையும் என தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
சென்னை புழல் அடுத்த காவாங்கரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நிர்மலா என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய பாஸ்கரன், இஸ்மாயில் ஆகிய 2தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற வீட்டில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவிலேயே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழப்பு என்பது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது என்றார். கடந்த 1993ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டில் 225 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இது துக்ககரமான விஷயம் எனவும், தமிழ்நாடு அரசு இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் ஆய்வு கூட்டம் நடத்தி தூய்மை பணிகளுக்கு 100கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக கூறினார். உடனடியாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு சம்பவம் நடைபெற்ற இடத்தின் உரிமையாளர் 15லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு உள்ள நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படாததால் குடிநீர் வாரியம் உடனடியாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் அதனை பெற்று கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மனித மலத்தை மனிதர்களே அள்ளும் தொழில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் தொழிலாளர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே அணுக வேண்டும் எனவும், இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பு கவசங்களோடு தொழிலாளர்கள் உள்ளே இறங்கி தூய்மை படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார். விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் இடத்தின் உரிமையாளர்கள் வழங்க வேண்டிய இழப்பீடு 15 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், மேலும் சிறை தண்டனையும் ஓராண்டில் இருந்து 5ஆண்டுகள், 10ஆண்டுகள் என அதிகரித்தால் உயிரிழப்பு சம்பவங்கள் குறையும் எனவும் வெங்கடேசன் தெரிவித்தார்.
அண்மையில் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மனிதர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்துவதை தவிர்த்து முற்றிலும் இயந்திர மயமாக்கி உயிரிழப்புகளை குறைப்புது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். கழிவுநீர் அகற்றுவதற்கு முற்றிலும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்கள் சுய கட்டுப்பாடோடு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இறங்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவங்களில் மெத்தனமாக செயல்படும் மாசுக்கட்டுப்பாட்டு துறை, உள்ளாட்சி அமைப்புகள், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்தால் அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்வார்கள் எனவும், மேலும் அரசு அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இனி வரும் காலங்களில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளதாகவும், ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.