திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நாடார் சங்க நிர்வாகிகள்

மளிகை கடை உரிமையாளர் தாக்கப்பட்டதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தை நாடார் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.;

Update: 2024-02-07 09:26 GMT

தாக்கப்பட்ட மளிகை கடை உரிமையாளர் ஆறுமுகசாமி.

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் மளிகை பொருட்களை வாங்கிவிட்டு பணம் கேட்டு தர மறுத்ததுடன், கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு தராததால் சரமாரியாக தாக்கிவிட்டு 2 நபர்கள் ஓட்டம் பிடித்தனர். இரண்டு நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் நாடார் சங்க நிர்வாகிகள் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை பகுதி எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது57). இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி இரவு மது போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்தவர்கள் மளிகை கடைக்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டனர். பின்னர் வாங்கிய பொருட்களுக்கு கடை உரிமையாளர் ஆறுமுகசாமி பணம் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் பணம் தர மறுத்துள்ளனர். இதனால் பணத்தை கொடுக்காமல் பொருள் தரமுடியாது என கடை உரிமையாளர் ஆறுமுகசாமி கூறியுள்ளார்.


அதனை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேலு, மற்றும் மாலு ஆகியோர்கள் நாங்கள் யார் என்று தெரியுமா ‌ எங்களிடம் பொருளுக்கு பணம் கேட்கிறாயா என்று சொல்லி கடையின் உரிமையாளர் ஆறுமுகசாமியை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். அப்போது கடைக்கு வந்த சிலர் ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

மேலும் பலத்த காயம் ஏற்பட்ட‌ ஆறுமுக சாமியை மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்,

இது குறித்து ஆறமுகசாமியின் மகன் தேன்ராஜ் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில்  ஆறுமுக சாமியை தாக்கிய நபர்களை குறித்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 2 நாட்கள் ஆயினும் இது வரை ‌ தப்பிச்சென்ற ‌ நபர்களை கைது செய்யாததால் சென்னை நாடார் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது  தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்  என இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் உறுதி அளித்தார். மாமூல் கேட்டு தர மறுத்ததால் தாக்கியவர்களை காவல் துறை கைது செய்யாவிட்டால் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் வியாபாரிகள் எச்சரித்து விட்டு  கலைந்து சென்றனர்.இந்த  சம்பவத்தால் காவல் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News