திருவள்ளூரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை நாளான இன்று திருவள்ளூர் டோல்கேட் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.

Update: 2024-06-17 07:15 GMT

 திருவள்ளூர் டோல்கேட் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை செய்தனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி திருவள்ளூர் டோல்கேட் அருகே. அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த இப்ராஹிம் நபி என்பவருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக அல்லாவிடம் பிரார்த்தனை செய்து அதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிடப்பட்டது. அந்தக் குழந்தை இளம் பருவத்தில் வளர்ந்த பொழுது அல்லாஹ் இப்ராஹிம் நபியின் கனவில் வந்து தங்களது குழந்தையை அறுத்து பலியிட வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்.

நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையாக இருந்தாலும் மிகவும் பாசமான பிள்ளையாக இருந்தாலும் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென தியாக மனப்பான்மையுடன் தனது மகனை வெட்டி பலியிட முயன்ற போது அல்லாஹ்வின் இறைத்தூதர் இறங்கி வந்து மகனை அழிக்க வேண்டாம். அதற்கு பதிலாக ஒட்டகம் மாடு ஆடு போன்ற பிராணிகளை அறுத்து பலியிடுங்கள் என கூறினார்.

இந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை போற்றும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது குர்பானி என்ற சடங்கு மூலம் ஆடு அல்லது மாடு ஆகியவற்றை அறுத்து மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கு தனது அண்டை வீட்டார்களுக்கும் மற்றொரு பங்கு ஏழை எளிய மக்களுக்கும் மற்றொரு பங்கு சொந்தம் பந்தங்களுக்கு என முறையாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும்.

இதன் மூலம் ஏழைகள் முதல் அண்டை வீட்டார்கள் வரை அனைவரும் ஒரே சமம் எனவும் இது போன்ற பண்டிகை தினங்களில் அனைவரும் பசி பட்டினி இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் இந்த பண்டிகை மூலம் நமக்கு உணர்த்துகிறது.

அதன்படி திருவள்ளூர் ஈத்கா மைதானத்தில் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் உமர் பாருக் அன்வாரி தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் ஆகியவற்றை இஸ்லாமியர்கள் கேட்டு பின்னர் தொழுகைக்கு வந்தவர்களுக்கு வாழ்த்துக் கூறி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். பின்னர் ஏழைகளுக்கு தானம் செய்தவாறு தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News