கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்த நகராட்சி அதிகாரிகள்
திருவள்ளூரில் உணவகங்கள் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மறைத்து வைத்து பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்ததுடன் அபராதம் விதித்து எச்சரித்தனர்.;
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பூக்கடை, பழக்கடைகளில் நகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு : பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை : ஒரு டன் பிளாஸ்டிக் பறிமுதல்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் நடமாட்டத்தை ஒழிக்க நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாக சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.
பங்க் கடை, பேன்சி ஸ்டோர், மளிகை கடை, உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து, அபராதம் விதித்ததுடன், இனி தொடர்ந்து உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தும் வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஜூலை 3 சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினமாக கொண்டாடப்பட்டு வருவதால் திருவள்ளூர் நகராட்சி சார்பில் திருவள்ளூர் உழவர் சந்தை பகுதியில் உள்ள பூக்கடை, பழக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசர் , சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ, சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்பட நகராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக் பைகள் வைத்திருக்கும் கடைகளுக்கு சென்று மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
மேலும் பிளாஸ்டி பைக்கு மாற்றாக தை இலை, மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கி, பிளாஸ்டிக் பை வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்ததுடன், இன்னொரு முறை பிளாஸ்டிக் பைகள் விநியோகித்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு விதிமுறையை மீறி பிளாஸ்டிக் பைகள் உபயோகித்த கடைகளுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தும் ஒரு டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்தனர்.