அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார் எம்.எல்.ஏ. ராஜேந்திரன்
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சைக்கிள்களை வழங்கினார்.;
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாளநகரில் உள்ள கே.இ.நடேச செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பொ.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஏ.எல்லப்பன், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர், வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 259 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.
தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதன்படி விலையில்லா மிதி வண்டி வழங்கும் திட்டத்தையும் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்.
விலையில்லா மிதிவண்டியை பெறும் மாணவ மாணவியர் நல்ல முறையில் பள்ளிக்கு வந்து நன்றாகப் படித்து உயர் பதவியில் அமர வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்படும் சிறு சிறு தோல்விகளை கண்டுகொள்ளாமல் தூக்கியெறிந்து தன்னம்பிக்கையோடு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்தார். படிப்பு ஒன்று தான் மாணவர்களாகிய தங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும். பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களை நாம் கவுரவிக்க வேண்டும். பெற்றோர்கள் சொல்வதை கேட்டு செயல்பட்டால் வெற்றி உங்களை தேடி வரும் என்றும் மாணவர்களிடம் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பேசினார்.
தொடர்ந்து திருப்பாச்சூர் பகுதியில் கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில் நடைபெற்ற ஆடு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு திருப்பாச்சூர் பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோருக்கு ஆடுகளை வழங்கினார்