திருவள்ளூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூரில் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.;
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயா நகர் விரிவாக்கம் குமரவேல் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சர்வ சாய்பாபா ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,கிராம தேவதா வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தேறியது.
பின்னர் சாய்பாபா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு,தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் அனுக் விக்னேஷ்வர பூஜை,வாஸ்து சாந்தி,ப்ரவேசபலி,மிருத்சங்கரஹனம்,அங்குரார்பணம்,கும்ப அலங்காரம்,முதல் கால யாகபூஜை,சுவாமிக்கு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை விஷேசசந்தி,நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹீதி,பூர்ணாஹூதியும், தீபாராதனையும்,யாத்ரா தானம்,கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர், விமான கலசத்தில் புனித நீரை ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து மூலவர் சாய்பாபாவிற்கு கும்பாபிஷேகமும் பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருவள்ளூர், பெரியகுப்பம், மணவாளநகர், காக்களூர், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக சக்கரவர்த்தி சாய் ஸ்ரீ பரசுராம் குரு ஜீ, ஆலய ஸ்தபதி தினேஷ்குமார் மற்றும் ஆலய நிர்வாகம்,பொதுமக்கள் செய்திருந்தனர்.