ஸ்ரீ தில்லி போலாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
திருவள்ளூர் அருகே ஸ்ரீ தில்லி போலாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ளது பழம்பெரும் அருள்மிகு ஸ்ரீ தில்லி போலாட்சி அம்மன் திருக்கோவில்.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா கணபதி பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் காலயாக பூஜை, நான்காம் கால யாக பூஜை முடிந்து பல்வேறு மகா பூரணாகுத்தி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் முடிக்கப்பட்டு பின்னர் புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கலசங்களை பட்டாச்சாரர்கள் தலையில் சுமந்து மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து ஆலய கோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கு மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதன் பின்னர் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.