சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருவள்ளூர் அருகே சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.;

Update: 2023-06-12 08:45 GMT
சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் சிவகுமார்.

திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டிய பள்ளங்களால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் முயற்சியால் குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்பட்டது. காவல்துறையினரின் இந்த செயல் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் பாராட்டை வெகுவாய்பெற்றுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்யும் பணியை ஒப்பந்தம் விட்டு ஆங்காங்கே பள்ளம் தோண்டி போட்டுள்ளனர். இதனால் குண்டும் குழியாக பல இடங்களில் திருவள்ளூர் நகரில் சாலைகள் தெருக்களின் நிலை மாறி போயின. குறிப்பாக சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உழவர் சந்தை எதிரே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வந்தனர். மேலும் நடந்து செல்பவர்கள் கூட இந்த பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டதால் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் என்பவர் தனது சொந்த முயற்சியில் கற்களையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டி சாலையை பேட்ச் ஒர்க் மூலம் சீர் செய்தார்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் அநேகரின் பாராட்டை பெற்றது. திருவள்ளூர் நகரில் குறிப்பாக நகராட்சிக்கு எதிரே உள்ள திருவள்ளூர் எம். எல். ஏ. அலுவலகத்திற்கு முன்பு உள்ள சென்னை செல்லும் சாலை, வடக்கு ராஜ வீதி ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக நகராட்சியில் டெண்டர் எடுத்தவர்கள் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News