குழந்தை பாக்கியத்திற்காக தர்காவிற்கு சென்ற பெண்ணிடம் நகை திருட்டு
திருவள்ளூர் அருகே குழந்தை பாக்கியத்திற்காக தர்காவிற்கு சென்ற பெண்ணிடம் நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.;
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. இதனையடுத்து எரையூர் கிராமத்தில் உள்ள தர்காவில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து நேற்று சண்முகம் அவரது மனைவி சிவசக்தி ஆகிய இருவரும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எறையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர். அப்போது அதே ஆட்டோவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஏறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு தானும் எறையூர் செல்வதாக கூறி ஆட்டோவில் பயணித்தவர் நட்பாக பழகியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து தர்காவில் இரவு நேரமானதால் அந்த 35 வயது பெண்மணி உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி மயக்கமடைந்துள்ளார். அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை அந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன், தாலுகா ஆய்வாளர் கமலஹாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரையூர் தர்காவிலும் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.