நூதன முறையில் நகை கொள்ளை; தம்பதி கைது
Crime News in Tamil -நூதன முறையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர மாநில தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
Crime News in Tamil -திருவள்ளூர் அருகே, மயக்க மருந்து கொடுத்து நூதன முறையில் தங்க நகைகளை கொள்ளையடித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த தாவுத்துக்கான் பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசிலா (65) இவர் தனது தாய் கன்னியம்மாள் (84) மகன்கள் சீனிவாசன், பார்த்திபன், மருமகள்கள் மாலதி, ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், லட்சுமி தம்பதி, தாங்கள் கட்டுமான தொழில் செய்து வருவதாகவும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்று கேட்டு, வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி, இரவு பணிக்காக மருமகள் ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் ஆகியோர் வெளியே சென்றுவிட்டனர். புதிதாக குடிவந்த அந்த தம்பதி, வீட்டின் உரிமையாளரான சுசீலா உள்ளிட்ட அனைவரிடமும் நட்பாக பழகி வந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி இரவு 8 மணியளவில் சுசிலா, தனக்கு பால் காய்ச்சி தருமாறு அந்த தம்பதியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த தம்பதி, சுசிலா உள்ளிட்ட மற்றவர்களுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதனை பருகிய அனைவரும் மயங்கிய நிலையில் இருக்கும்போது, வீட்டிலிருந்த 10 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர்.
இதனையடுத்து 13-ம்தேதி அதிகாலை வேலைக்குச் சென்ற மருமகள் வந்து பார்த்தபோது, வீட்டில் அனைவரும் மயக்க நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து மூதாட்டி சுசிலாவை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து ஹேமாவதி திருவள்ளூர் டவுன் போலிசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய தம்பதி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையில், தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்த்திற்கு சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கணேசன் (32) மற்றும் லட்சுமி (30) தம்பதியை கைது செய்து அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மயக்க மருந்து கொடுத்து நூதன முறையில் தங்க நகைகளை கொள்ளையடித்த தம்பதியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2