இந்தியாவில் 7 கோடி பேர் போதை பொருட்களை பயன்படுத்துவதாக தகவல்
இந்தியாவில் 7 கோடி பேர் போதை பொருட்களை பயன்படுத்துவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.;
தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் பேட்டி அளித்தார்.
நாட்டில் 7 கோடி பேர் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் அளித்த பேட்டியில் கூறினார்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் எழுதிய விரும்பியதை பெறுவீர் என்ற புத்தகம் வெளியீட்டு விழாவானதுதனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் அரவிந்தன் மற்றும் திருவள்ளூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஹரிகுமார்ஜி ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர், பின்னர் மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் கூறியதாவது:-
போதைப் பொருள் நம் நாட்டின் மீது செலுத்துப்படும் போர். கடந்த 2019 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய நாட்டில் 7 கோடி பேர் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள். அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் போதை பொருட்களை இந்தியாவில் கொண்டு வந்து நாட்டை அழிக்க நினைக்கிறார்கள்.
போதை பழக்கத்தை தடுக்க தினந்தோறும் காலை மாலை யோகா பயிற்சி, உடற்பயிற்சி போன்ற உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் போதைப் பழக்கத்திலிருந்து தடுக்க ஆசிரியர்கள் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் காவல்துறையிடம் தொடர்ந்து நட்பு வைத்திருந்தால் மாணவர்கள் மத்தியில் உள்ள போதை பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியும்.
பள்ளி கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பவர்களுக்கான கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் மீதும் அத்தகைய சட்டங்கள் பயன்படுத்தி போதை பொருட்கள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரக்கூடிய போதைப்பொருட்கள் 80 முதல் 85 சதவீதம் கடல் வழியாகவே கடத்தி வரப்படுவருகிறது. கடல் வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் போதை பொருட்கள் அதிகமாக கடத்திவரப்பட்டு வருகிறது. கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 2500 கிலோ போதை பொருட்கள் கடந்த மாதம் கொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவார்கள் மருத்துவர்கள் இடையே போதைப் பழக்கத்தை தடுக்க விழிப்புணர்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலமாக இதுவரை 25 வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 10,000 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.