குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பற்றி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
பொன்னேரி அருகே கல்லூரி விழாவில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பற்றி குறிப்பிட்டார்.
குலசேகரப்பட்டினத்தில் அடுத்த ஏவுதளம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மக்களின் பயன்பாட்டிற்காகவே செயற்கைகோள்கள் தேவைப்படுகின்றன எனபொன்னேரியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி தனியார் கல்லூரியில் ஒவ்வொரு மனிதரும் குழந்தை தான் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. சந்திரயான் திட்ட இயக்குனரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு பெரும்பாலான மக்கள் நிலவை திரும்பி பார்க்கும் தருணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். பல நாடுகள் முயற்சித்த சூழலில் இந்தியா பத்திரமாக நிலவில் இறங்கியதையும், அங்கு தண்ணீர் இருப்பதை கண்டறிந்ததையும் பார்த்து தற்போது மாணவர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அறிவியல் தொழில்நுட்பத்தை நோக்கி மாணவர்களின் பார்வையை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். வெப்பமயமாதல் அபாயகரமாக இருந்து வரும் சூழலில் விண்வெளி ஆராய்ச்சி மிகுந்த பயனளிப்பதாக தெரிவித்தார். நிலவின் மூலம் வெப்பமயமாதலின் மாறுதலை கண்டறிந்து நிலவு உருவாக்கும் என்பது அறிவியலாளர்களின் நம்பிக்கையாய் இருப்பதாக கூறினார்.
அடுத்த தலைமுறையினர் கல்வியை ஆதாரமாக கொண்டு ஆராய்ச்சி, பயணங்கள் தமிழகத்தை நோக்கி செல்ல முத்தாய்ப்பதாக அமையும் என்றார். அறிவியலால் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ஆராய்ச்சிகளால் நிலவின் தன்மையும் பாதிக்குமோ என்ற செய்தியாளரின் கேள்விக்கு சூரியனில் வரும் எரிசக்தியை போல நிலவிலும் மூலப்பொருள் உள்ளதாகவும், அதனை கொண்டு வந்தும் எரிசக்தியை உருவாக்கலாம் என தெரிவித்தார்.
மருந்துகள் கண்டுபிடிப்பை விட்டுவிட்டு நிலவுக்கு விண்கலம் அனுப்புவது ஆக்கப்பூர்வமானதா என்ற கேள்விக்கு உணவு என்பது மனிதனின் அனைத்து உறுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்பது போல, அறிவியல் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்கு தேவை என்றார். குடும்பத்தில் உணவுக்கு பற்றாக்குறை என்றாலும் குழந்தைகளின் கல்வியை கைவிடாமல் தொடர்வது போல அறிவியல் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமானது என்றார்.மக்களின் சுகாதாரம், உணவு பாதுகாப்பு என்பதை தாண்டி அடுத்த தலைமுறைக்கான அறிவியல் வளர்ச்சியும் தேவை என்றார்.
மேலும் 140கோடி மக்கள் தன்னிறைவு பெறாத நாட்டில் நிலவுக்கு விண்கலம் அமைப்பது தேவையா என்ற கேள்விக்கு மற்ற நாடுகளை பின்பற்றி இந்தியா நிலவிற்கு செல்லவில்லை என்றும், 1950 முதல் 1970 வரை 100க்கும் மேற்பட்ட விண்கலங்கள் நிலவிற்கு அனுப்பப்பட்டதாகவும், பிற நாடுகள் அனுப்பிய பாதையில் நாம் பயணிக்கவில்லை எனவும், பிற நாடுகளை காட்டிலும் குறைந்த செலவிலேயே நாம் விண்கலத்தை ஏவுவதாக தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம், வெள்ள பாதிப்புகள், மீனவர்களுக்கு பாதுகாப்பு என மக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி பயன்படுவதாக கூறினார். மக்கள் பயன்பாட்டிற்காகவே செயற்கைகோள்கள் ஏவப்படுவதாக தெரிவித்தார்.
குலசேகரப்பட்டினத்தில் அடுத்த ஏவுதளம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன எனவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.