பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது தவறு : செ.கு. தமிழரசன் பேட்டி
பாராளுமன்ற புதிய கட்டிட திறப்புவிழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது தவறு என்று செ.கு.தமிழரசன் பேட்டியில் கூறினார்.;
பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் புறக்கணித்தது தவறு. இந்தியாவில் உள்ள 40 கோடி அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தியது போலாகும் என்று முன்னாள் சபாநாயகரும்,இந்திய குடியரசுக் கட்சி தலைவருமான செ.கு. தமிழரசன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அதன் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர் நிகழ்ச்சியில்
கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம் என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம்-எழிலரசி தம்பதியர் மகள் வி.ஜெனித்தா இன்பரசி என்கிற மாணவி,2022-2023 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வில் 600 - க்கு 595 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்ட அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றதை பாராட்டும் வகையில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி நினைவு பரிசை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் சபாநாயகரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான செ.கு.தமிழரசன்: 'புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் புறக்கணித்தது, இந்தியாவில் உள்ள 40 கோடி அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தியது போலாகும். இந்த புறக்கணிப்பு அரசியல் சட்டத்திறக்கு புறம்பானது. பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது மதச்சார்பு நிலையாகும். அசோக ஸ்தூபியை மறைக்கவும், வரலாற்றில இருந்து எடுக்கவும் புதியதாக செங்கோல் வைப்பது பௌத்த அறநெறிக்கு எதிரானது. ஆகவே எதிர்கட்சிகளின் புறக்கணிப்பு நியாயமானதே என்று கூறினார்.மேலும் தொடக்கக் கல்வி வர்த்தகமானதற்கு அரசாங்கமே காரணம் எனவும் குற்றம் சுமத்தினார்.