100 நாள் பணியின்போது பெண்களிடம் அநாகரீகம்: இளைஞர் கைது

திருவள்ளூர் அருகே 100 நாள் பணியின்போது பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-05-05 02:45 GMT

கைது செய்யப்பட்ட இளைஞர்.

திருவள்ளூர் மாவட்டம்,  புல்லரம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட செல்லியம்மன் கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசி அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், ஆடைகளை அவிழ்த்து ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் உத்திரவாதத்தை ஏற்காத பெண்கள் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விசாரணையில், பெண்களிடம் தகாத முறையில் பேசி நடந்து கொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்டிக்கர் பிரபா என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் குமுறினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனையடுத்து கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தின் அருகே பதுங்கியிருந்த பிரபாவை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே இது போன்று பல முறை தகாத செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பிரபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News