விடுமுறையில் பாடம் நடத்தினால் நடவடிக்கை- திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
விடுமுறையில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தற்போதைய நிலையில் 1 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடுமுறை கால நாட்களில் தனியார் பள்ளிகளில் மாற்றுச் சீருடையில் மாணவ, மாணவியர்களை வரவழைத்து பாடம் நடத்துவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. அதிலும், தற்போது கொரோனா நோய் ஒமிக்கரான் தொற்று பரவி வரும் நிலையில், இதுபோன்ற பள்ளிகள் திறக்கும் செயல் அரசின் உத்தரவை மீறியதாகும்.
எனவே அரசு உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் புகார்கள் வந்தாலோ மற்றும் ஆய்வு செய்வதன் மூலம் தெரியவந்தாலோ அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விடுமுறை நாட்களில் எக் காரணத்தைக் கொண்டும் மாணவ, மாணவியர்களுக்கு பாடம் நடத்தக் கூடாது. மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.