ஊத்துக்கோட்டை அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறிமுதல்
ஊத்துக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த230 கிலோ குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ஊத்துக்கோட்டை அருகே சட்ட விரோதமாக கார் செட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் தனியார் கார் செட்டில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்த தகவலின் பெயரில் ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான தனிப்படை போலீசார் தாராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் கார் செட் ஒன்றில் ஆய்வு செய்தபோது குடோனுக்குள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 29 மூட்டைகளில் அடங்கிய 230 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை தரக்கூடிய பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர்.
குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் குட்கா போதைப் பொருட்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனாலும் பல்வேறு இடங்களிலும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறைந்த பாடு இல்லை. எனவே இவை தமிழகத்திற்குள் எந்த வழியாக வருகிறது என்பதை போலீசார் கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்தினால் மட்டுமே இவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.