பத்திரிகையாளர்கள் பெயரை பயன்படுத்தி மோசடி: மதுக் கடத்திய இருவர் கைது..!

Update: 2021-06-04 05:35 GMT

பத்திரிக்கையாளர் என்ற பெயரில் மோசடி செய்த இருவரையும் மடக்கி பிடித்த போலீசார். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் கைது, 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் பகல் 12 மணி வரை மது கடை திறந்து இருப்பதால் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்களில் சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

அதில் குறிப்பாக ஊடகம் என்ற பெயரில் இந்த மது கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தன. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி இன்று கனகம்மாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சித்தூர் மாவட்டம் நகரியில் இருந்து சென்னை வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் ஊடகம் என்ற ஸ்டிக்கர் இருந்ததால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் விசாரணையில் அவர்கள் யூடியூப் சேனல் நடத்தி வருவதும் ஊடகம் என்ற ஸ்டிக்கரை ஒட்டி வந்த போலி பத்திரிகையாளர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து நகரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், மது கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த விஷ்ணு, ஆனந்த் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News