அதிக அளவு பால் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் பணியிடை நீக்கம்

திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் அதிக அளவு பால் வினியோகம் செய்யப்பட்ட வழக்கில் பொது மேலாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2024-05-26 07:15 GMT

அதிக அளவு பால் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டனர் (மாதிரி படம்)

காக்களூர் ஆவின் பால் பண்ணையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பால் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆவின் பொது மேலாளர் ரமேஷ் குமார் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.அப்படி ஏற்றி அனுப்பப்படும் பால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அனுப்புவதாக சென்னை ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று 24-ஆம் தேதி டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் காத்திருந்த போது காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்த 3 லாரிகளை மடக்கி சோதனை செய்ததில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரிகளை மீண்டும் ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு வந்து சோதனை செய்தனர். அதில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட 135 டப்பில் 1620 லிட்டர் பால் மற்றும் 7 டப்புகளில் தயிர் கூடுதலாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊழல் தடுப்பு டிஎஸ்பி சத்தியசீலன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் அந்தப் பாலை வாகனத்தில் ஏற்றுவதும் , சரியாக ஏற்றுகிறார்களா என்பதை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நபர்களே ஆய்வு செய்கின்றனர். இதனை துணை மேலாளர் ஆய்வு செய்கிறார். இதனை தொழிற்சாலை உதவியாளர் அதிகாரி சரி பார்த்து அனுப்பி வைப்பதும், எவ்வளவு பால் யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதை இளநிலை உதவியாளர் தெரிவிப்பதும் தெரியவந்தது. ஆனால் ஒவ்வொரு லாரியில் வரும் கூலி ஆட்களே அந்த பால் டப்புகளை லாரியில் ஏற்றுவதும், ஒரு லாரிக்கு எவ்வளவு டப் ஏற்ற வேண்டும் என்ற எந்த கணக்கும் அதனை சோதனை செய்யும் நபர்களிடமோ வழங்குவதில்லை என்பதும் தெரியவந்தது.


பால் பண்ணை அதிகாரிகளே கையில் வைத்துக் கொண்டிருப்பதால் சோதனை செய்து அனுப்புபவர்களுக்கும் எந்த விவரமும் தெரியவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காக்களூர் ஆவின் பால் பண்ணை பொது மேலாளர் ரமேஷ் குமார் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பணியில் இருந்த துணை மேலாளர் கனிஷா, தொழிற்சாலை உதவியாளர் முரளி இளநிலை உதவி அலுவலர் ராஜா ஆகிய மூன்று பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கை வருவதற்கு முன்பே அந்த 3 பேரையும் பொது மேலாளர் ரமேஷ் குமார் சஸ்பெண்ட் செய்தது ஆவின் மேலாண்மை இயக்குனருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நாள்தோறும் நடைபெறும் இந்த நூதன திருட்டு சம்பவத்திற்கு பொது மேலாளர் ரமேஷ் குமாரே பொறுப்பாக இருக்க கூடும் என்பதாலும், ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கைக்கு முன்பே தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த 3 பேரையும் சஸ்பென்ட் செய்திருக்க கூடும் என்பதாலும் ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித், காக்களூர் ஆவின் பால் பண்ணை பொது மேலாளர் ரமேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவருக்கு மாற்றாக விழுப்புரம் பொது மேலாளர் ராஜேஷ் காக்களூர் ஆவின் பால் பண்ணைக்கு பொது மேலாளராக பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News