முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜ் துவக்கிய வன்னியர் வாழ்வுரிமை சங்கம்
முன்னாள் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ் வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தை துவக்கி உள்ளார்.
பா.ம.க.வின் முன்னாள் நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவி ராஜ் வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தை தொடங்கினார்.கட்சியிலிருந்து நானாக வரவில்லை.வெளியே அனுப்பி விட்டார்கள் எனவும் தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவதற்கு காரணம் அன்புமணி தான் என அவர் காட்டமாக கூறி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவரும். முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான ரவி ராஜ் தற்போது தன்னிச்சையாக வன்னியர் வாழ்வுரிமை சங்கம் என்ற பெயரில் சங்கத்தை தொடங்கினார். இதற்கான தொடக்க விழா கொடி அறிமுகம் மஞ்சள் நிற ஆடை அறிமுகம் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 200.க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறுவர்கள் ஓரிரு பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், பரதநாட்டியம், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.இதில் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் பாடல்களுக்கு அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற பனியனை கழற்றிக்கொண்டு கைகளில் சுற்றியவாறு ஆடி பாடிய சம்பவம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திடீரென மேடையில் ஏறிய ரவிராஜ் இளைஞர்களையும், சிறுவர்களையும் அமைதியாக அமரும்படி கேட்டுக் கொண்டு பின்னர் பேசத் தொடங்கிய நிலையில் வெளிநாட்டில் விவசாயம் சிறப்பாக உள்ளது போல் அங்கு ஆய்வு செய்து அதேபோல் நம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் ஈட்ட இந்த சங்கம் முயற்சி செய்யும். பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் எந்த நிலையில் இருக்கும் அதிகாரிகளையும் யாராக இருந்தாலும்,அவர்களை எதிர்த்து போராட்ட களத்தில் நிற்கும். பீகார் மற்றும் ஆந்திராவில் ஜாதி வாரி கனக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் நடைபெறவில்லை எனவும் இட ஒதுக்கீட்டிற்கு போராடிய தமிழகத்தில் நடைபெறவில்லை தமிழக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்துவதாகவும் கூறினார்.
வன்னியர் இன மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாவீரன் குருவிற்கு ஆண்டு தோறும் குரு ஜெயந்தி விழா நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள வன்னியர்கள் அணி திரண்டு ஆண்டுதோறும் மரியாதை செலுத்துவதற்கு வன்னியர் வாழ்வுரிமை சங்கம் ஏற்பாடு செய்யும் எனவும் அந்த குருபூஜை காடுவெட்டியில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வன்னியர் வாழ்வுரிமை சங்கம் பா.ம.க.வில் இருந்து விலகி தனியாக தொடங்கப்பட்டுள்ளது. நான் பா.ம.க.வில் இருந்து பிரிந்து வரவில்லை அவர்கள் அனுப்பி விட்டார்கள்.நான் வெளியேற்றப்பட்டதற்கு அன்பு மணி தான் காரணம் என்றார்.